Saturday, 16 February 2013

ANDHA NAAL



அந்த நாள் 1954-ம் ஆண்டு வீணை. S. பாலசந்தரின் (VEENAI S. BALACHANDER) இயக்கத்தின் வெளிவந்த  ஒரு த்ரில்லர் படம். புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநர் அகிரோ குரோசாவாவின் படைப்பான RASHOMON-ன் தாக்கத்தால் உருவான அந்த நாள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்ப்படம் ஆகும்இதன் கதை பல கோணங்களில் MULTIPLE PERSPECTIVE சொல்லப்பட்டிருக்கிறது

1943, அக்டோபர் 11 அன்று இந்தியாவின் மதராஸப் பட்டினத்தின் மீது குண்டு வீசித் தாக்கியதுமறுநாள் திருவல்லிக்கேணியில் வசித்து வரும் ரேடியோ இஞ்சினியரும் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சியருமான ராஜன் (SIVAJI GANESAN) தன் வீட்டில் தனது கைத்துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டிருப்பது கண்டறியப் படுகிறது. துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக் காரரான சின்னையாப் பிள்ளை போலீஸிடம் புகார் தருகிறார். இதை விசாரிக்க ரகசிய போலிஸான சிவானந்தத்துடன்(JAVAR SEETHARAMAN) போலீஸ் அதிகாரியான புருஷோத்தமன் நாயுடுவும் வருகிறார்கள். முதலில் யாரோ திருடன்தான் பணத்துக்காக இதை செய்திருப்பதாக சந்தேகப்பட, ஆனால் பணம் எதுவும் திருடு போகாததை உணர்ந்து, இதை செய்தது திருடன் இல்லை என்று முடிவெடுக்கிறார்கள். அதே நேரம் மறுநாள் மதராஸில் குண்டு போடப்படுவதை தெரிந்து கொண்டு இந்தியாவிலிருந்து வெளியேற ராஜன் திட்டமிட்டிருப்பது தெளிவாகிறது. ஆனால் ராஜனின் மனைவி உஷா (BANDARI BAI) எந்த விசாரணைக்கும் பதில் சொல்ல முடியாமல் துக்கத்தில் இருப்பதை அறிந்து செய்வதறியாது இருக்கிறார்கள்.
இதனால் ராஜனின் வீட்டைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரணையை தொடர முடிவெடுக்கிறார்கள். முதலில் புகார் கொடுத்த சின்னையாப் பிள்ளையை விசாரிக்க, அவர் ராஜனின் குடும்பச் சொத்தில் தன் பங்கை ராஜனின் தம்பி பட்டாபி கேட்டதாகவும், ஆனால் பட்டாபி, அவர் மனைவி இருவரின் பொறுப்பில்லாத் தனத்தை உணர்ந்த ராஜன் அவன் பங்கை தர மறுத்ததாகவும் நடந்த சம்பவத்தை சொல்லி, பட்டாபிதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்
இதை சிவானந்தமும் நாயுடுவும் விசாரிக்கச் செல்லும் நேரத்தில் பட்டாபி தன் அண்ணன் இறப்பைத் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்வதை அறிந்து அதிர்கின்றனர். மேலும் உயிருடன் இருந்த வரையில் தன் அண்ணனின் அருமை தெரியாமல் போனதை நினைத்து வருந்திய பட்டாபி, தன் மனைவி ஹேமா ஏற்கனவே ராஜனுடம் சொத்து விஷயமாக சண்டை போட்டிருப்பதை சொல்லி, அவள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறான்.
முதலில் மறுத்த ஹேமா அவள் கணவனை கைது செய்து விடுவதாக விடுத்த மிரட்டலால் உண்மையை சொல்ல முன்வருகிறாள். அதே நேரம் ராஜனுக்கு அம்புஜம் என்ற நடனக்காரியுடன் தொடர்பு இருந்ததாகவும், அவள் கருவுற்றிருப்பதை ராஜனிடம் சொன்னபோது, ராஜன் அதற்கு அலட்சியமான பதில் சொன்ன சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், அந்தக் கோபத்தால் அம்புஜம்தான் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடும் என்று ஒரு தகவலைத் தருகிறாள்.
அம்புஜத்தை தேடிப் போகையில் அவள் ராஜனின் மரணத்தை அறிந்து அந்த ஊரை விட்டே போய் விட்ட செய்தியை அறிகிறார்கள். ஆனால் அம்புஜத்தின் வேலைக்காரனான சண்முகத்தின் உதவியால் அவளைத் தேடிப் பிடித்து விசாரிக்கிறார்கள். ஆனால் அவளோ ராஜனின் பக்கத்து வீட்டுக்காரரான சின்னையாப் பிள்ளை தனக்கு வளர்ப்புத் தந்தை என்றும் அவர்கள் பழகி வந்தது அவருக்குப் பிடிக்காததால் அவர்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
யானையைத் தடவிப் பார்த்த குருடனின் கருத்துதான் இவர்கள் கருத்து என்று விளக்கமளித்த சிவானந்தம் ராஜனின் கேமராவில் இருந்த போட்டோக்களைப் பார்த்தும், ராஜனின் ஷூவில் இருந்த கைரேகை, கண்ணீர், உடைந்த வளையல்  போன்றவற்றை வைத்து சந்தேகம் அடைந்து ராஜன் மற்றும் உஷாவின் கல்லூரி ரங்கநாதனை விசாரிக்கிறார். அவர் தந்த தகவலின் படி ராஜன் தன் ஆராய்ச்சிக்காக எதுவும் செய்யக்கூடிய மனநிலையில் இருந்ததாகவும், உஷா மிகவும் தேசபக்தி கொண்டவள் என்பதும் தெரிய வருகிறது.
இறுதியாக உஷாவை விசாரித்தபோது, உஷா தன் கல்லூரி நாட்களிலேயே ராஜன், ஒரு நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தனிமனித வளர்ச்சியும் முக்கியம் என்ற கருத்தைக் கொண்டவனாகவும், ஆனால் உஷாவோ நாட்டுக்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயார் என்ற கருத்தை உடையவளாகவும் இருந்தது தெரிகிறது. இதற்கிடையில் சிவானந்தம் உஷாவின் கைரேகைகளை அவளுக்குத் தெரியாமலே எடுக்கிறார்.
ஒரு மாலை நேரம் சிவானந்தம் கொலையாளிகள் என்று சந்தேகப்படும் அனைவரிடமும் பொய்த் தோட்டாகள் நிரப்பிய துப்பாக்கியைக் கொடுத்துத் தன்னை ராஜனாக நினைத்து சுடும்படி சொல்கிறார். எல்லோரும் தைரியமாகச் சுட, உஷாவால் சுட முடியாமல் தவிக்கிறாள். இறுதியில் பட்டாபியையும் ஹேமாவையும் கைது செய்யும்படி சிவானந்தம் சொல்ல, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் உஷா உண்மையை சொல்ல முன்வருகிறாள்.

இதில் ராஜனுக்கு ஜப்பான் ராணுவத்துடன் தொடர்பு இருந்ததும், அவன் தேசத்துக்கு துரோகம் செய்யும் வகையில் அவர்கள் இந்தியாவில் குண்டு வீசுவது தொடர்பாக ஜப்பானியரின் திட்டத்தில் முக்கிய நபராக இருப்பது உஷாவுக்குத் தெரிய வருகிறது. அவளுக்கு இருக்கும் தேசப்பற்றால் இதற்கு அனுமதிக்காத உஷா ராஜனை சுட முயற்சிக்கிறாள். பிறகு மனதை மாற்றிக் கொண்ட உஷா ராஜனின் பதற்றத்தால் எதிர்பாராமல் துப்பாக்கி வெடிக்க, ராஜன் இறக்கிறான். அந்த வருத்தத்தால் அவன் காலைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் சிந்துகிறாள்.

சிவானந்தமும் நாயுடுவும் குண்டு வீச்சு தொடர்பான திட்டங்கள் அடங்கிய காகிதங்களைக் கேட்க, உஷா அதை எடுத்து வர உள்ளே போகிறாள். அந்த நேரத்தில் உஷாதான் கொலையாளி என்பதை கண்டுபிடித்த விதத்தை சொல்கிறார். உள்ளே சென்ற உஷா நீண்ட நேரமாக வராமல் இருக்க, அடுத்த நொடி உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. சிவானந்தமும் நாயுடுவும் உள்ளே ஓட, அவர்களுக்குப் பின்னால் இருந்த திரை மூடுகிறது.

நடிகர்கள்
சிவாஜி கணேசன் - ராஜன்
ஜாவர் சீதாராமன் - சிவானந்தம்
பண்டரி பாய் - உஷா

தொழில்நுட்பக் கலைஞர்கள்
வீணை S. பாலசந்தர் - இயக்குநர்
முக்தா V. ஸ்ரீநிவாசன் - உதவி இயக்குநர்
மாருதி ராவ் - ஒளிப்பதிவு
S. சூர்யா - படத்தொகுப்பு
இந்தப் படத்தை YOUTUBE-ல் காண click ANDHA NAAL



No comments:

Post a Comment